கல்லூரி முன்பு இருக்கும் பழச்சாறு கடையில் சில வாரங்களுக்கு முன்னால்
நண்பர்களுடன் பொழுதை போக்கிகொண்டிருந்தேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும்,
அனுமதிப்பு நாளின் (admission day) அடுத்த நாள் காலை
வேளையிலும், எல்லா பெரும்பாலான அறுவை சிகிச்சை நாட்களின் (theatre day) மாலை பொழுதுகளிலும்
அந்த கடைக்கு செல்வதை, ஒரு கட்டாயமாக வைத்திருந்தோம். பெரும்பாலான
நேரங்களில் நாங்கள் உரக்க பேசிக்கொண்டிருந்ததினால், அருகில் உள்ளவர்களின் குரல்கள்
என் செவிகளில் விழுந்ததே இல்லை.
அன்று வழக்கத்துக்கு மாறாக நாங்கள் குறைந்த எண்ணிக்கையில்
சென்றிருந்தோம். பழச்சாறு சொல்லிவிட்டு, நண்பர் வாங்கி வைத்திருந்த ‘பிரட்
ஆம்லேட்டை’ பிடுங்கி தின்றுக்கொண்டிருக்கையில் தான் அந்த வார்த்தை காதில்
விழுந்தது. அருகில் தேநீர் அருந்திகொண்டிருந்த ஒரு நபர் “போடா நன்றி கேட்ட நாயே”
என்று ஆரம்பித்து, அலைபேசியில் மறுமுனையில் இருந்தவரை அர்ச்சிக்க ஆரம்பித்து
விட்டார்.
எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே வீட்டில் நாய்களை
வளர்த்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் இரண்டு நாய்கள் இருப்பார்கள். கருப்பு/
வெள்ளை, உயரம்/ குட்டை, கடிக்கும்/ கடிக்காது என்ற வகைபாட்டிலேயே வீட்டுக்கு
வருபவர்கள் அவைகளை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் எங்களுக்கு அவைகள் ‘அது’ அல்ல
‘அவன்கள்’.
நானும், என்னுடைய இளைய சகோதரனும் படிப்பதற்காக வெளியே சென்ற பிறகு, என்னுடைய
அம்மாவிற்கும் அவர்கள் நாங்கள் இல்லாத குறையை போக்கும் விதத்திலும், ஒரு நல்ல
பொழுது போக்காகவும் இருந்து வருகிறார்கள். நாங்களும் அவ்வளவு ஒன்றியிருப்போம்.எப்போது
வீட்டிற்க்கு பேசினாலும் மற்ற விஷயங்களை விட அவர்களைப் பற்றிய விசாரிப்புகள் தான்
அதிகம் இடம் பெற்றிருக்கும்.
இவ்வளவு ஆண்டுகளில் அவர்களின் துரோகத்தினையோ, நன்றி கெட்டத்தனத்தையோ பார்த்தது
இல்லை. அதே கால காலகட்டத்தில், நான்
பார்த்த/பழகிய மனிதர்களில், புறம் பேசுபவர்களும், முதுகில் குத்துபவர்களும், காரிய
வாதிகளும் தான் அதிகம். நன்றி கெட்டத்தனத்திற்கு நாயுடன் ஒப்பிடுபவர்களுக்கு ஒரு சின்ன
கோரிக்கை, தயவு செய்து நாய்களை அசிங்கபடுதாதீர்கள். அவைகளுக்கு உங்களை உதாசீனப்படுத்தவோ,
நம்பிக்கை துரோகம் செய்யவோ, முதுகில் குத்தவோ, உங்களை பற்றி தவறாக பேசவோ தெரியாது.
மாறாக ஒரு தெரு நாய்க்கு ஐம்பது பைசாவிற்கு ஒரு புறை வாங்கி போட்டுப்பாருங்கள்,
அது தன் காலம் முழுவதும் வாலை ஆட்டிக்கொண்டு, தன் நன்றியை காட்டிகொண்டிருக்கும்!!!!!

No comments:
Post a Comment