நாத்திகம்
என்றவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது பெரியாரும், அவரது திடாவிட இயக்கமும்.
தற்போதைய திராவிட கழகங்களை பற்றி நான் ஏதாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள
விரும்பவில்லை. இரண்டு தலைமுறைகளாவது அவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால்
பயனடைந்திருக்கும். அவர் என்ன சொன்னார், அவைகள் சரியா, தவறா, பகுத்தறிவு
பற்றியெல்லாம் விவாதிக்க போவதில்லை.
எனக்கு
நினைவு தெரிந்த நாளிலிருந்து சாமி கும்பிட்டது நினைவிருக்கிறது. சிறுவனாய்
இருக்கும் போது, சாமியறையில் ஒளித்து வைத்த வாழைப்பழங்களை காலி செய்துவிட்டு
பின்பு அம்மாயி ‘சாமி கண்ணை குத்திடும்’ என்று பயமுறுத்தியதற்கு அம்மாவிடம்
ஒளிந்து அழுதிருக்கிறேன். வளர வளர ஒரு முதிர்ச்சி வந்ததும், சாமியிடம் இருந்த
பயமும் ஈடுபாடும் மெல்ல குறைய ஆரம்பித்தது. பள்ளிகூட காலங்களிலேயே எப்போதெல்லாம்
பரீட்சை வருகிறதோ அப்போது மட்டும் ஆத்திகனாய் இருந்திருக்கிறேன். பன்னிரெண்டாம்
வகுப்பு முடித்தபிறகு, கல்லூரி சேர்வதற்கு முன்னால் இருந்த விடுமுறைக் காலத்தில் ஊர்க்கோவில்
வேலைகளில் கடும் ஈடுபாடு காட்டியிருக்கிறேன். கல்லூரி சேர்ந்த முதலிரண்டு
ஆண்டுகளில் பெரிய பக்திமானாய் இருந்திருக்கிறேன். கல்லூரி முடியும் தருவாயிலும்,
பயிற்சி மருத்துவனாய் ஆனபிறகும் எனக்கும் சாமிக்கும் இருந்த பந்தம் குறையத்
தொடங்கிவிட்டது.
நான்
கும்பிடாவிட்டாலும் முக்கியமான நுழைவுத்தேர்வு
எழுதும் தினத்தன்று அம்மாவிடம் கோவிலுக்கு சென்று வேண்டுமாறு
பணித்திருக்கிறேன். என்னதான் படித்திருந்தாலும், சாமிகுத்தம் ஆகி பரிட்சையில் நல்ல
ரேங்க் வாங்காமல் போய்விடுவேனோ என்கிற பயம்தான்!!! இதுமாதிரி வெவ்வேறு
காலகட்டங்களில் வெவ்வேறு அளவுகளில் ஆத்திகனாயும் இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம்
அது கூட இல்லை!!
பொதுவாக
இருக்கும் நாத்திகர்களைப் போல கடவுள் இல்லை என்றோ, நம்புவது முட்டாள் தனம் என்றோ
நான் யாரிடமும் வாதிட்டது இல்லை. எல்லாவற்றையும் என் அளவிலேயே நிறுத்திவிடுவேன்.
என்னுடைய நண்பர்களில் படு தீவிர ஆத்திகனும் உண்டு படு தீவிர நாத்திகனும் உண்டு.
இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் இருவரும் பெரிதளவில் வாதம்
செய்துகொண்டதில்லை. மாறாக, நான் தான் அவர்களிடம் சிக்கிக் கொள்வேன். காரணம், என்
அளவில் தான் நான் கடவுள் நம்பிக்கையற்றவனே தவிர என் வீட்டில் யாரும் அப்படி இல்லை.
என் வீட்டார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நான் செய்யும் சில விஷயங்களால்
தான். தோஷங்களை நிவர்த்தி செய்ய காளஹஸ்தி போய் வா கூறினார்கள். முதலில் பகுத்தறிவு
பேசி நான் மறுத்தேன், ஆனால் அவர்களின் மனம் புண்படாதிருக்க வேண்டும் என்பதற்காக
போய் வந்தேன். அங்கு என்ன செய்தேன் என்பதை தனியாக எழுத வேண்டும். அத்துடன் என்
வீட்டார்கள் அதனை படித்தால் மொத்த காரியமும் கெட்டு விடும்!!!
நாமெல்லோரும்
ஏதோ ஒரு வகையில், வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் முழுமையடைந்து இன்பமுடன் வாழ முயற்சித்துக்
கொண்டுதான் இருக்கிறோம். அதை அடையும் முறைதான்
ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு தனி
மனிதனாய் மட்டும் எல்லாவற்றிலும் முழுமையடைய முடியாது. மனிதன் ஒரு சமூக விலங்கு
என்று சமூகவியலில் கூறுவார்கள்.
நம்மை
சுற்றியிருப்பவர்களுக்கும் நாம் முதிர்ச்சியடைவதில் பங்குண்டு. நாம் கொண்டுள்ள
பெரும்பாலான நம்பிக்கைகள், சிறு வயதில் நம் பெற்றோரும், பள்ளிகளிலும்,
சுற்றியிருப்பவரும் நம்மில் விதைத்தவைகள். நாம் வளர வளர அவைகளும்
முதிர்ச்சியடைகின்றன. இந்த நம்பிக்கைகளில் நிறைய மதத்தினை சார்ந்ததாகவே
இருக்கின்றன. இதனால் காலப் போக்கில் நாம் மாறுவதை ஜீரணிப்பது அவர்களுக்கு
சிக்கலாகிறது.
என்னை
பொறுத்தவரை, ஆத்திகம் பற்றியோ நாத்திகம் பற்றியோ விவாதம் செய்வதால் யாருக்கும்
பைசா பயனில்லை. சொல்லப் போனால் இரண்டு நபர்களுக்கு இடையே இருக்கும் உறவில், கொள்கைகள்,
நம்பிக்கைகள் எல்லாவுமே ஒன்றாய், ஒரு ஒத்திசைவுடன் இருந்தாலே அது வெற்றிகரமாய்
அமைந்துவிடும்.
மூட
நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தாலே போதும், கடவுளை நம்புவதும் நம்பாதிருப்பதும்
அவரவர் விருப்பமே. நம் கொள்கைகளை, விருப்பங்களை மற்றவர் மீது திணிக்காமல்
இருந்தாலே, தனி நபர்களுக்கிடையே இருக்கும் உறவு நன்றாக இருக்கும். அதே போல
மற்றவர்களின் நம்பிக்கையை, விருப்பங்களை, கொள்கைகளை அவமதிக்காதீர்கள். தெளிவாக
தெரியாத ஒன்றை பற்றி இன்னொருவருடன் வாதிட்டு நாமே ஏன் நம்மை கஷ்டப்படுத்திக் கொள்ள
வேண்டும்??

No comments:
Post a Comment