தொடர்பவர்கள்

Wednesday, 23 October 2013

பாசம்!!!




வெகு நாட்களாய் தன்னை பார்க்க விரும்பிய

தாத்தாவிடம் கேட்க கேள்வி ஏதும் இல்லை அந்த பெயரனுக்கு!!!!  

மேகத்தில் யானை தேடியும், சதுரங்க காய்களை கலைத்தும்,

தன் பள்ளி  நண்பர்களை பற்றி விவரித்தும்,

முழுநரை தாடியை பிடித்திழுத்தும்

பல் செட்டை கழற்றி போட சொல்லியும்

விளையாடிவிட்டு, வீட்டிற்கு போவதற்காய்

தந்தையின் கை பிடித்து காப்பகத்திலிருந்து

வெளிவரும் போது கேட்டான்,

நீங்களும் பெருசானா இங்க தான் இருப்பீங்களா???? என்று!!!!!!

பாசம்!!!










கட்டாயத்தால்  பெற்றோரை காண்பதற்காய்,

முதியோர் காப்பகம் செல்பவனுக்கு

புரியவா போகிறது, வாசலை மறித்துக் கொண்டு

குட்டிகளுக்கு பாலூட்டும் தெருநாயின் பாசம்????!!!

Saturday, 25 May 2013

எதற்கு நாத்திகம்??




நாத்திகம் என்றவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது பெரியாரும், அவரது திடாவிட இயக்கமும். தற்போதைய திராவிட கழகங்களை பற்றி நான் ஏதாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. இரண்டு தலைமுறைகளாவது அவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால் பயனடைந்திருக்கும். அவர் என்ன சொன்னார், அவைகள் சரியா, தவறா, பகுத்தறிவு பற்றியெல்லாம் விவாதிக்க போவதில்லை.


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சாமி கும்பிட்டது நினைவிருக்கிறது. சிறுவனாய் இருக்கும் போது, சாமியறையில் ஒளித்து வைத்த வாழைப்பழங்களை காலி செய்துவிட்டு பின்பு அம்மாயி ‘சாமி கண்ணை குத்திடும்’ என்று பயமுறுத்தியதற்கு அம்மாவிடம் ஒளிந்து அழுதிருக்கிறேன். வளர வளர ஒரு முதிர்ச்சி வந்ததும், சாமியிடம் இருந்த பயமும் ஈடுபாடும் மெல்ல குறைய ஆரம்பித்தது. பள்ளிகூட காலங்களிலேயே எப்போதெல்லாம் பரீட்சை வருகிறதோ அப்போது மட்டும் ஆத்திகனாய் இருந்திருக்கிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபிறகு, கல்லூரி சேர்வதற்கு முன்னால் இருந்த விடுமுறைக் காலத்தில் ஊர்க்கோவில் வேலைகளில் கடும் ஈடுபாடு காட்டியிருக்கிறேன். கல்லூரி சேர்ந்த முதலிரண்டு ஆண்டுகளில் பெரிய பக்திமானாய் இருந்திருக்கிறேன். கல்லூரி முடியும் தருவாயிலும், பயிற்சி மருத்துவனாய் ஆனபிறகும் எனக்கும் சாமிக்கும் இருந்த பந்தம் குறையத் தொடங்கிவிட்டது.


நான் கும்பிடாவிட்டாலும் முக்கியமான நுழைவுத்தேர்வு  எழுதும் தினத்தன்று அம்மாவிடம் கோவிலுக்கு சென்று வேண்டுமாறு பணித்திருக்கிறேன். என்னதான் படித்திருந்தாலும், சாமிகுத்தம் ஆகி பரிட்சையில் நல்ல ரேங்க் வாங்காமல் போய்விடுவேனோ என்கிற பயம்தான்!!! இதுமாதிரி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அளவுகளில் ஆத்திகனாயும் இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அது கூட இல்லை!!


பொதுவாக இருக்கும் நாத்திகர்களைப் போல கடவுள் இல்லை என்றோ, நம்புவது முட்டாள் தனம் என்றோ நான் யாரிடமும் வாதிட்டது இல்லை. எல்லாவற்றையும் என் அளவிலேயே நிறுத்திவிடுவேன். என்னுடைய நண்பர்களில் படு தீவிர ஆத்திகனும் உண்டு படு தீவிர நாத்திகனும் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் இருவரும் பெரிதளவில் வாதம் செய்துகொண்டதில்லை. மாறாக, நான் தான் அவர்களிடம் சிக்கிக் கொள்வேன். காரணம், என் அளவில் தான் நான் கடவுள் நம்பிக்கையற்றவனே தவிர என் வீட்டில் யாரும் அப்படி இல்லை. என் வீட்டார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நான் செய்யும் சில விஷயங்களால் தான். தோஷங்களை நிவர்த்தி செய்ய காளஹஸ்தி போய் வா கூறினார்கள். முதலில் பகுத்தறிவு பேசி நான் மறுத்தேன், ஆனால் அவர்களின் மனம் புண்படாதிருக்க வேண்டும் என்பதற்காக போய் வந்தேன். அங்கு என்ன செய்தேன் என்பதை தனியாக எழுத வேண்டும். அத்துடன் என் வீட்டார்கள் அதனை படித்தால் மொத்த காரியமும் கெட்டு விடும்!!!


நாமெல்லோரும் ஏதோ ஒரு வகையில், வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் முழுமையடைந்து இன்பமுடன் வாழ முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  அதை அடையும் முறைதான் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.  ஒரு தனி மனிதனாய் மட்டும் எல்லாவற்றிலும் முழுமையடைய முடியாது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சமூகவியலில் கூறுவார்கள்.
நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நாம் முதிர்ச்சியடைவதில் பங்குண்டு. நாம் கொண்டுள்ள பெரும்பாலான நம்பிக்கைகள், சிறு வயதில் நம் பெற்றோரும், பள்ளிகளிலும், சுற்றியிருப்பவரும் நம்மில் விதைத்தவைகள். நாம் வளர வளர அவைகளும் முதிர்ச்சியடைகின்றன. இந்த நம்பிக்கைகளில் நிறைய மதத்தினை சார்ந்ததாகவே இருக்கின்றன. இதனால் காலப் போக்கில் நாம் மாறுவதை ஜீரணிப்பது அவர்களுக்கு சிக்கலாகிறது.


என்னை பொறுத்தவரை, ஆத்திகம் பற்றியோ நாத்திகம் பற்றியோ விவாதம் செய்வதால் யாருக்கும் பைசா பயனில்லை. சொல்லப் போனால் இரண்டு நபர்களுக்கு இடையே இருக்கும் உறவில், கொள்கைகள், நம்பிக்கைகள் எல்லாவுமே ஒன்றாய், ஒரு ஒத்திசைவுடன் இருந்தாலே அது வெற்றிகரமாய் அமைந்துவிடும்.


மூட நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தாலே போதும், கடவுளை நம்புவதும் நம்பாதிருப்பதும் அவரவர் விருப்பமே. நம் கொள்கைகளை, விருப்பங்களை மற்றவர் மீது திணிக்காமல் இருந்தாலே, தனி நபர்களுக்கிடையே இருக்கும் உறவு நன்றாக இருக்கும். அதே போல மற்றவர்களின் நம்பிக்கையை, விருப்பங்களை, கொள்கைகளை அவமதிக்காதீர்கள். தெளிவாக தெரியாத ஒன்றை பற்றி இன்னொருவருடன் வாதிட்டு நாமே ஏன் நம்மை கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டும்??


Sunday, 12 May 2013

சிந்திக்க ஒரு நிமிடம்!


ஆற்றலை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகையிலிருந்து, 

மற்றொரு வகைக்கு சிறிது இழப்புடன் மாற்ற முடியும்!!





எட்டாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் உருப்போட செய்தது, அப்போது

 மண்டையில் சரியாக ஏறவில்லை என்றாலும், இப்போது புரிந்தாக வேண்டும்.

நம் விஷயத்துக்கு வருவோம். இப்போது எந்த தமிழ் செய்தி சேனல்களை 

எடுத்துக்கொண்டாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய விவாதம்தான். 

அணுசக்தி தேவையா, வேண்டாமா என்ற விவாதத்தை தொலைகாட்சியில் பேசும் 

பண்டிதர்களிடையே விட்டு விடுகிறேன். அடியேனுக்கு அவர்கள் அளவுக்கு அறிவு 

இல்லை.



ஆப்பிரிக்கக் காடுகளில் வேட்டைக்காரர்களாகவும், உணவு சேகரித்தும் வாழ்ந்து 

கொண்டிருந்த ஆதிமனிதன்,  பரிணாம வளர்ச்சியில், கருவிகள் உருவாக்கவும், 

பயிரிடவும், கற்றுக்கொண்டான். கூடவே வடக்கு ஐரோப்பா, ஆசியா, மற்றும் 

வடஅமெரிக்க பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்தான். அது சுமார் 70000-130000 

ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த பகுதிகளில் கடும்குளிர் வாட்டியெடுத்த காலம். 

மற்ற விலங்கினங்களை போல மனிதனுக்கு குளிரை தாங்கும் இயற்கைக் கவசம் 

எதுவும் இல்லை. தீயின் பயன்பாட்டை முன்னரே அறிந்திருந்தாலும், அப்போது தான் 

முழுமையாக உபயோகிக்கத் தொடங்கினான். அதுவரை, மரங்களை மட்டுமே 

பயன்படுத்தி வந்தவன், அந்த பகுதிகளில் அதிகமாக கிடைத்த, பீட்(peat) என்ற ஒரு

 வகையான நிலக்கரியை கண்டுபிடித்து உபயோகிக்க தொடங்கினான்.



நாகரிகம் வளர ஆரம்பித்த பிறகு, உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படை 

தேவைகள் தாண்டி மற்ற தேவைகளும் தோன்றின. முக்கியமாக பொழுதுபோக்கு,

 கலை, அறிவியல் துறைகள் முன்னேற ஆரம்பித்தன. அத்துடன் மனிதனின் 

எரிசக்தி தேவைகளும் வளர ஆரம்பித்தது. காடுகள் அழிய ஆரம்பித்தன. 

சுற்றுச்சூழல் மாசுபட ஆரம்பித்தது. கடந்த முந்நூறு ஆண்டுகளில் தான் 

பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், முன்னேற்றங்களும் நடந்தேறியது. இந்த 

முன்னேற்றங்களுக்கு முக்கிய காரணமாக, நிலக்கரி உபயோகத்தை சொல்லலாம். 

உச்சகட்டமாக எரி எண்ணையின் பயனை கண்டுபிடித்தது. காலை எழுந்தவுடன் 

குடிக்கும் காபி கப் தொடங்கி, இதனை எழுதும் மடிக்கணினி, அமர்ந்திருக்கும் சேர்,

 இரவு தூங்கும் படுக்கை வரை எல்லாமே பெட்ரோலியத்திலிருந்து உருவாக்கிய 

பொருள்களே.



எண்ணெய்வளமிக்க நிலத்திற்கான சண்டைகளும், ஆக்கிரமிப்புகளும் இருபதாம்

 நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டன. எண்ணெய் வளம் எப்படியும்

 ஒரு நாள் தீர்ந்துவிடும் என்று தெரியும். எந்த ஒரு சூழ்நிலைக்கும் மாற்று திட்டம்

 வைத்திருப்பான் மனிதன். அது போலவே, அணுப்பிளவு சோதனைகளும், அணு

 குண்டு வெடிப்புகளும். அணுசக்தியின் திறனை உலகிற்கு பறைசாற்றின.



பொதுத்துறைக்கு  என்று ரஷ்யாவில் 1954 ஆம் ஆண்டு முதல் அணுஉலை 

தொடங்கிய பின்பு, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, சுவீடன்,

 சீனா, ஜப்பான், போன்ற வளர்ந்த நாடுகளோடு, இந்தியா, பாகிஸ்தான் போன்ற 

வளரும் நாடுகளுடன் 2013, ஜனவரி 16 ஆம் தேதிப்படி உலகில் மொத்தமாக

 முப்பத்தியொரு நாடுகளில் 437 அணுஉலைகள் இயங்கி வருகின்றன.



பொதுவாக அணுசக்தி ஆதரவாளர்கள் சொல்வது, நிலக்கரி எரித்து மின்சாரம் 

தயாரிக்கும் போது உருவாகும் கார்பன் டைஆக்சைடு உருவாவது இல்லை. 

சுற்றுச்சூழல் மாசடைவது குறைவு, ஆரம்ப பண முதலீட்டை தவிர வேறு எதுவும் 

தேவை இல்லை என்பது.  உண்மைதான் ஆனாலும் சில உண்மைகளை மறைத்து 

விடுகிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள்.



முதலாவது, அணுமின் நிலையங்களின் ஆயுள் காலம். பெரும்பாலானவை, முப்பது 

ஆண்டுகள் வரை மட்டுமே செயல்படும். பின்னர் அவைகளை இழுத்து 

மூடவேண்டியது தான். ஒரு சாதாரண தொழிற்ச்சாலைக்கு மூடு விழா நடத்துவதை 

போல செய்ய முடியாது. உலையின் உள்ளே உபயோகப்படுத்திய அனைத்து 

பொருட்களிலும் இருக்கும் கதிர்வீச்சு மக்களுக்கு பாதிக்காத அளவுக்கு குறைக்க 

வேண்டும். நிறைய முறை இதற்கு சாத்தியம் குறைவுதான். அப்படி குறைக்க 

முடியாமல் போனவைகளையும் அணுக்கழிவாக வகைப்படுத்தி விடுவார்கள்.



இரண்டாவது, அணுக்கழிவு மேலாண்மை. அணுப்பிளவால் அணுஉலையில் 

உருவாகும் தனிமங்களும் (fission products) கதிரியக்கம் கொண்டவையே. இவைகளின்

 கதிரியக்க அளவு பாதி அளவுக்கு குறையவே பல லட்ச ஆண்டுகள் ஆகும். 

அவைகளை ஆழமாக பாறைகளில், நிலத்திலோ, கடலிலோ புதைப்பது மட்டுமே 

தற்போது செய்ய முடிவது. அவ்வாறு புதைக்கப்பட்ட கழிவுகளின் ஆயுட்காலம் 

முழுவதும் மனிதற்கோ, பிற உயிரினங்களுக்கோ ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பது,

 நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.



மூன்றாவது, விபத்து ஏற்படும் சாத்தியக்கூறு. நாங்கள் கட்டிய அணுஉலை மிகவும் 

பாதுகாப்பானது, விபத்துக்கள் நடக்க அறவே வாய்ப்புகள் இல்லை என்று யாரும் 

சொல்ல முடியாது. காரணம் அவைகளின் பல்லடுக்கு வடிவமைப்பு முறைகள்.  ஒரு 

பகுதியில் பிரச்னை ஏற்பட்டாலும், அதன் தாக்கம் மற்றொரு பகுதியிலும் வர

 வாய்ப்பிருக்கிறது. ஒன்றுக்கு ஒன்று சார்ந்திருப்பதால் டொமினோ எபெக்டில் 

மொத்த உலையுமே பாதிக்கலாம்!! எல்லோரும் பயமுறுத்துவதைப் போல 

அணுகுண்டு போல வெடிக்காது, மாறாக முழுவதும் உருகி, நிலத்திலும், காற்றிலும்,

 நீரிழும், கதிரியக்கத் தனிமங்களை வெளியிடும் வாய்ப்பிருக்கிறது. இது போன்ற 

விபத்துதான் அமெரிக்காவின் த்ரீ ஐலண்டு, சோவித்தின் செர்னோபில், ஜப்பானின்

 புகொஷிமா, ஆகிய இடங்களில் நடந்துள்ளது. இது கண்டிப்பாக நடக்கும் என்று 

நான் கூறவில்லை, நடக்க வாய்ப்பிருக்கின்றது என்று தான் சொல்கிறேன். 






இருந்தாலும் நிலக்கரியிலிருந்து பெறப்படும் மின்சக்தியினால் உண்டாகும் 

ஒட்டுமொத்த மாசை விட அணுசக்தியினால் ஒன்றாகும் மாசு குறைவுதான். ஏன்

 நிலக்கரியினால் நமக்கு காற்று மாசுபடுவது மட்டுமே தெரியும். எத்தனை பேருக்கு 

நிலக்கரி எரிப்பதன் மூலம் காற்றில் கதிரியக்கப் பொருள்கள் கலக்கின்றது என்று 

தெரியும்???எந்த மரபு சார்ந்த முறையினாலும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலை 

மாசுபடுத்துகிறோம்.அணுக்கழிவு மேலாண்மைக்கு ஆகும் செலவை கணக்கில்

 எடுக்கவில்லை என்றால், மிச்ச செலவு குறைவு தான். எந்த துர்ச்சம்பவங்களும் 

நிகழாதிருக்கும் வரையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் ரொம்ப குறைவே!!! 

இதனால்தான் அரசாங்கம், அணுஉலைகளை கட்ட முற்படுகிறது. ஆயினும்

 ஒட்டுமொத்த ரிஸ்க் அதிகம்தான்.


இதற்கெல்லாம் மாற்று என்ன??


இந்தியா போன்ற வெப்ப பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய 

சக்தியை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம், காற்றலைகளின் எண்ணிக்கையை 

அதிகப்படுத்தலாம், கடலலைகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை 

செயல்படுத்தலாம், பெட்ரோல், டீசல், ஆகியவற்றுடன் எத்தனால் கலந்து 

உபயோகிக்கலாம். எப்படியும் இன்னும் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு மேல் கச்சா 

எண்ணெய் கிடைக்காது என்று தெரிந்த பிறகும் மாற்று ஏற்பாடுகளுக்கு, நம்மவர்கள்

 ஒரு முயற்சியும் எடுத்த மாதிரியே தெரியவில்லை. சூரியசக்தியை உபயோகிக்கும் 

முறைக்கு அரசின் மானியமோ, கடன் உதவியோ இருப்பதாக தெரியவில்லை. 

முதல்முறை  வைக்க மட்டும் தான் செலவாகும். வைத்தபின் வேறு எந்த செலவும்

இருக்காது.

சூரியசக்தியை உபயொகிப்பவர்க்கு, சரியான மானியங்கள் வழங்கி ஊக்கப்படுத்த 

வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் சூரிய சக்தியை பயன்படுத்த

 வேண்டும், மழை நீர் சேகரிப்பு நிலையங்கள் இருக்க வேண்டும், மின் விளக்குகளின்

 பயன்பாட்டை குறைக்கும் வகையில் கட்டிடங்களின் வடிவமைப்பு இருக்க வேண்டும், 

முக்கியமாக இவையெல்லாம் காகிதங்களோடு நின்று கொள்ளாமல் முறையாக

 நடைமுறைப்படுத்த வேண்டும். செய்யுமா அரசாங்கம்???


நம் பங்கு??

சும்மா கோஷம் போடாமல், அறையிலிருந்து வரும்போது மின்விசிறியையும்,

விளக்கையும் அணைத்துவிட்டு வருவோமே!!! 



Friday, 10 May 2013

அன்னையின் கண்ணீர்!





விண்ணை நீ தொடுவதற்காய்

மண்ணில் எங்களை வீழ்த்துகிறாய்..

வெயிலுக்கு நிழல் தந்தேன்

தீயால் எங்களை எரிக்கின்றாய்..

பசிக்கு உணவு தந்தோம்

தேவைக்காய் எங்களை அழிக்கிறாய்..

சுவாசிக்க தரும் காற்றை

மாசாக்கி  எங்கள் மூச்சடைத்து

நீரையும் மண்ணையும் நஞ்சாக்கி

எங்களை பட்டுப்போக செய்கிறாய்..

நன்றி எதிர்பாராமல் செய்திருக்கின்றோம்

நன்மைகள் பலவற்றை நாங்கள்!!

நன்றி மறப்பது நன்றன்று

என்று பெயருக்கு சொல்லாமல்

வாழவிடுவாயா மனிதா நீ

பூவுலகில் எங்கள் சந்ததியரை??

தினந்தோறும் அழிக்கப்படும்

காடுகளுக்காய் ஒரு குரல்!!!!

மதிப்பற்ற பரிசு!!!




“எப்பயும் இவ்வளோ நேரம் தூங்கினது இல்லை. ஆனா இந்த முறை ரொம்ப நேரமா தூங்கிட்டு இருக்கற மாதிரி இருக்கு. கடைசியா ஞாபகம் இருக்கறது பைக்ல போகறபோது கீழ விழுந்தது. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுனே தெரியாது. முழுசா இருட்டா தான் இருந்துச்சி. அப்போ அப்போ கொஞ்சம் வெளிச்சம் வந்ததும், தண்ணி குடுத்ததும் ஞாபகம் இருக்கு.
 திடீர்னு யாரோ என்னை அறுக்க ஆரம்பிச்சாங்க. அறுத்ததுக்கு அப்புறம் ஒரு தண்ணில முக்கி வச்சிட்டாங்க.. திரும்ப வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததப்போ ஊசியால தைக்க ஆரம்பிச்சாங்க. மறுபடியும் இருட்டு. திரும்பவும்  அப்போ அப்போ வெளிச்சமும், தண்ணியும் தந்தாங்க. ரொம்ப நேரத்துக்கு பிறகு பழைய மாதிரியே ஆகிட்டேன். இருட்டும் வெளிச்சமும் எப்பயும் போல வந்து போக ஆரம்பிச்சது.”

அந்த கண் மணிக்கு தெரியாது, தான் தானம் செய்யப்பட்டு ஒரு இரண்டு வயது குழந்தையின் பார்வையை திரும்ப பெற செய்திருக்கிறோம் என்று.

LET SOMEONE SEE THROUGH YOUR EYES, WHAT YOU HAVE SEEN!!
BE AN ORGAN DONOR, ALL IT COSTS IS LITTLE LOVE.
        உறுப்பு தானத்தை ஊக்குவியுங்கள்!!!


Wednesday, 8 May 2013

சில நன்றியற்ற மனிதர்களுக்கு.....


கல்லூரி முன்பு இருக்கும் பழச்சாறு கடையில் சில வாரங்களுக்கு முன்னால் நண்பர்களுடன் பொழுதை போக்கிகொண்டிருந்தேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அனுமதிப்பு நாளின் (admission day) அடுத்த நாள் காலை வேளையிலும், எல்லா பெரும்பாலான அறுவை சிகிச்சை நாட்களின் (theatre day) மாலை பொழுதுகளிலும் அந்த கடைக்கு செல்வதை, ஒரு கட்டாயமாக வைத்திருந்தோம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் உரக்க பேசிக்கொண்டிருந்ததினால், அருகில் உள்ளவர்களின் குரல்கள் என் செவிகளில் விழுந்ததே இல்லை.


அன்று வழக்கத்துக்கு மாறாக நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்றிருந்தோம். பழச்சாறு சொல்லிவிட்டு, நண்பர் வாங்கி வைத்திருந்த ‘பிரட் ஆம்லேட்டை’ பிடுங்கி தின்றுக்கொண்டிருக்கையில் தான் அந்த வார்த்தை காதில் விழுந்தது. அருகில் தேநீர் அருந்திகொண்டிருந்த ஒரு நபர் “போடா நன்றி கேட்ட நாயே” என்று ஆரம்பித்து, அலைபேசியில் மறுமுனையில் இருந்தவரை அர்ச்சிக்க ஆரம்பித்து விட்டார்.


எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே வீட்டில் நாய்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் இரண்டு நாய்கள் இருப்பார்கள். கருப்பு/ வெள்ளை, உயரம்/ குட்டை, கடிக்கும்/ கடிக்காது என்ற வகைபாட்டிலேயே வீட்டுக்கு வருபவர்கள் அவைகளை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் எங்களுக்கு அவைகள் ‘அது’ அல்ல ‘அவன்கள்’.
நானும், என்னுடைய இளைய சகோதரனும் படிப்பதற்காக வெளியே சென்ற பிறகு, என்னுடைய அம்மாவிற்கும் அவர்கள் நாங்கள் இல்லாத குறையை போக்கும் விதத்திலும், ஒரு நல்ல பொழுது போக்காகவும் இருந்து வருகிறார்கள். நாங்களும் அவ்வளவு ஒன்றியிருப்போம்.எப்போது வீட்டிற்க்கு பேசினாலும் மற்ற விஷயங்களை விட அவர்களைப் பற்றிய விசாரிப்புகள் தான் அதிகம் இடம் பெற்றிருக்கும்.

இவ்வளவு ஆண்டுகளில் அவர்களின் துரோகத்தினையோ, நன்றி கெட்டத்தனத்தையோ பார்த்தது இல்லை. அதே கால காலகட்டத்தில், நான் பார்த்த/பழகிய மனிதர்களில், புறம் பேசுபவர்களும், முதுகில் குத்துபவர்களும், காரிய வாதிகளும் தான் அதிகம். நன்றி கெட்டத்தனத்திற்கு நாயுடன் ஒப்பிடுபவர்களுக்கு ஒரு சின்ன கோரிக்கை, தயவு செய்து நாய்களை அசிங்கபடுதாதீர்கள். அவைகளுக்கு உங்களை உதாசீனப்படுத்தவோ, நம்பிக்கை துரோகம் செய்யவோ, முதுகில் குத்தவோ, உங்களை பற்றி தவறாக பேசவோ தெரியாது. மாறாக ஒரு தெரு நாய்க்கு ஐம்பது பைசாவிற்கு ஒரு புறை வாங்கி போட்டுப்பாருங்கள், அது தன் காலம் முழுவதும் வாலை ஆட்டிக்கொண்டு, தன் நன்றியை காட்டிகொண்டிருக்கும்!!!!!

Tuesday, 7 May 2013

எதுக்குடா எழுதியிருக்க????



எத்தனையோ நல்ல நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் படிப்பதை விட்டு விட்டு உன்னை போன்ற கழிசடை எழுதுவதை ஏண்டா படிக்கணும் என்ற உங்களின் கோபம் புரிகிறது.

முன்பெல்லாம் யாருக்கேனும் எழுத்தார்வம் இருந்தால், தங்களின் படைப்புகளை பல்வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, பதிப்பாசிரியரின்  கடிதத்திற்காக பிரசவ அறையின் முன் காத்திருக்கும் கணவன் போல காத்திருந்த காலம் மலையேறிவிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் விரல்நுனியின் சிறு தட்டலிலேயே உலகெங்கும் பதிப்பிற்கும் வசதி வந்த பிறகு என்னை போன்றவர்களும் எழுத தொடங்கியாகிவிட்டது.என்னை நானே ஏன் விமர்சிக்கக்கூடாது என்று தோன்றியதால்,  இதனை எழுதுகிறேன். இது ஒரு விதமான சுயவிமர்சனம்.

மனித மனம் படு மோசமானது. அது தன்னுடைய சுயநலத்தினையே பெரும்பாலான நேரங்களில் முன்னிறுத்திக்கொள்ளும். எந்த ஒரு மனிதனுக்குமே “தான்” என்ற எண்ணம் இல்லாமல் இல்லை. அதே போன்று மற்றவர் முன்னே தன்னை முன்னிறுத்தி கொள்ளும்படி செய்வதற்கான முயற்சிகளை இடையிராது  செய்துகொண்டிருக்கும். நமது அன்றாட செயல்களை நாம் ஆராய்ந்தாலே நம்மை பற்றி நமக்கு தெரிய வரும்.

பக்கத்து வீட்டுக்காரனை விட நாம் ஒருபடி மேலே இருக்க வேண்டும், நம் உடன் பிறந்தோரை விட வசதிகளில் அதிகமாக இருக்கவேண்டும், நம்மை தெரிந்தவர்களெல்லாம் நம்மை பற்றி வாய் பிளந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும், பணியிடத்தில், சுற்றத்தார், உடன்பிறந்தோர், இவ்வாறாக பலரும் நம்முடைய சாதனைகளையும், வளர்ச்சியையும் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும், நம்மை பிரமிப்பாக பார்க்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருக்காத ஆட்களே இல்லை என்று கூறலாம். (நம் பின்னால் நம்மை பற்றி என்ன பேசினால் என்ன?, நமக்கு முன்னால் நம்மை போற்றினால் போதாதா?? என்று நினைக்காதவர் யாரும் உண்டா??)

இதற்கெல்லாம் அடிப்படை, ஒரு அங்கீகாரத்திற்காக எப்போதும் ஏங்கிக்கொண்டிருக்கும் மனித மனமே. தொட்டிலில் அழும் இளைய குழந்தையை கவனிக்கும் போது, கவனத்தை ஈர்ப்பதற்க்காக சும்மாவே அழும் இன்னொரு குழந்தையாய் இருக்கும் போதே இது தொடங்கிவிடுகின்றது. பின் பருவ வளர்ச்சிக்கு ஏற்ப நாம் விரும்பும் அங்கீகாரத்திற்கான அளவுகோலும், அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளும் மாறி விடுகின்றது. இப்படியாக ஒரு அங்கீகாரம் அடைய நான் செய்யும் முயற்சியாகவே நான் எழுதுவதை பார்கின்றேன்!!!
எல்லாம் சரி அது என்ன ஆனந்தம் என்று பேர் வைத்திருக்கிறாய் என்று என்னை நன்றாக அறிந்த நண்பர்களின் மனதில் உள்ள கேள்வி எனக்கு கேட்கிறது!!!

 உன்னை தெரிந்த நாட்களில் இருந்தே ஒரு விதமான மன அழுத்தத்தில் தானே (depression னிற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை, மனோதத்துவ நண்பர் யாரேனும் இதனை வாசித்தால் தெளிவு படுத்தவும்.) இருந்திருக்கிறாய், அதென்ன பேரில் மட்டும் ஆனந்தம் வேண்டியிருக்கிறது என்று கேட்க தோன்றுகிறதா நண்பர்களே?? இதோ அதற்கும் பதில் வைத்துள்ளேன்.
எல்லாம் ஒரு  Positive reinforcement வேண்டிதான்.
அத்துடன் பிரசுரிக்க யார் தயவும் தேவையில்லை என்பதோடு, என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற கருத்துசுதந்திரமும் என்னை எழுதவைத்துவிட்டன.

 மற்றபடிக்கு நான் வாந்தி எடுக்கும் அனைத்தையும் படித்து விட்டு, திட்ட வேண்டும் என்று தோன்றினால் மறக்காமல் திட்டவும். பரம்பரையே காலி செய்யும் அளவுக்கு கோபம் வந்தால், தனியாகவும், இல்லை என்றால் பொதுவிலும் தாராளமாக திட்டலாம்!!!!