போன வாரம் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக மீனம்பாக்கம் வரை செல்ல
வேண்டியிருந்தது. மணி இரவு ஒரு எட்டு இருக்கும். கோட்டை ரயில் நிலையத்தில் பயண சீட்டு வாங்கிவிட்டு ( வழக்கம் போல தள்ளு
முள்ளு தான் ) நடைமேடை போவதற்குள் இரண்டாம் மின்னூர்தியும் கிளம்ப ஆயுத்தமாகிவிட்டது.
அந்த வண்டியை பிடிப்பதற்காக வழக்கம் போல கூட்டம் ஓடிக் கொண்டிருந்தது.
சாவதனமாக அடுத்த மின்னூர்தியில் போகலாம் என்று மெதுவாக நடந்து கொண்டிருந்தேன்.
நான் மெதுவாக போனதாலும் ஏற்கனவே கூட்டம் அலைமோதியதாலும் கடைசி பெட்டியையும் தவற
விட்டு விட்டார், சுமார் பத்து வயது குழந்தையை இழுத்துக்கொண்டு எனக்கு பின்னால் வேகமாக
ஓடி வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி, என்ன
அவசரமோ தெரியவில்லை.
“ என்ன எருமை மாடு கணக்கா மெதுவா போற, நீ எல்லாம் வாழ்க்கையில் எங்க முன்னுக்கு
வர போற “ என்ற சாபம் வேறு !!!!
பாவம் அந்த குழந்தை, ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லலாமே என்று அந்த பெண்மணியிடம்
“ குழந்தை என்னங்க பண்ணும், கூட்டம் அதிகமா இருந்தா அதற்கும் நடக்க கஷ்டமா தானே
இருக்கும் “ என்றேன்.
“நான் திட்டுனது உன்னை தான்,
நீ வேகமா வண்டி ஏறியிருந்தா நானும் ஏறியிருப்பேன். இப்போ அடுத்த வண்டிக்கு கால் மணி
நேரம் காத்திருக்கணும்” என்று என்னை கரித்து கொட்டினார்கள்.
மல்லாந்து படுத்து கொண்டு துப்பினால் நம் மேல தானே திரும்ப விழும்
என்று நினைத்து, அங்கிருந்து தள்ளி சென்றேன்!!!
அரக்க பரக்க எல்லோரும் ஓடிகொண்டிருக்கும் வாழ்க்கையில், பொறுமையுடன்
இருந்தால் முன்னேற முடியாது என்று அந்த பெண்மணி கருதினாரா அல்லது வேறு யாரிடமோ
இருந்த கோபத்தினை என்னிடம் காட்டினாரா என்று இன்று வரை எனக்கு தெரியாது. ஆயினும் அந்த கணத்தில் சில விஷயங்கள் என் மனதில் ஓட ஆரம்பித்தன.
இதோ உங்கள் பார்வைக்கும் அவற்றில் சில.......
போன வருடம் வெளியான நண்பன் திரைப்படத்தில் வருவதை போல, “ life
is a race, run, run, run” இது தான் எல்லோரை உந்தும்
சக்தியாக இருக்கிறது. தன்னை தவிர வேறு யாரையுமே கருத்தில் கொள்ளாமல் கடிவாளம்
கட்டிய பந்தயக் குதிரையை போலத்தான் ஓடிகொண்டிருக்கிறோம்.
நம் சிறு வயதிலேயே இந்த
கருத்தினையும் நமக்கு சோற்றுடன் சேர்த்து ஊட்டி வளர்க்கிறார்கள். நம் கல்வி முறை
பற்றி எத்தனையோ வல்லுனர்கள் பல கருத்துக்களை கூறியுள்ளனர். ஏதோ என் அறிவிற்கு
எட்டியதை சொல்ல போகிறேன்.
நம் ஆசிரியர்களோ, பெற்றோர்களோ நம்மை அனுபவித்து கற்று கொள்ளவோ, சரியாக
புரிந்து கொள்ளவோ விடுவதில்லை. மாறாக வாய்பாட்டை உருப்போடவும், சூத்திரங்களை
மனப்பாடம் செய்யவும் தான் கற்று கொடுக்கிறார்கள்.
இன்று “சூரிய” குடும்பத்தினை சார்ந்த ஒரு நகைச்சுவை சேனலில் ஒரு
நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சிதொகுப்பாளர் பொதுமக்களிடம்
கோக்குமாக்காக ஏதேனும் கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெறுவதே அந்நிகழ்ச்சி. வழக்கம்
போல வெற்று கேள்விகளுக்கிடையே, தமிழ் மாதங்கள் மொத்தம் எத்தனை என்று ஒரு கேள்வி!!! அதற்கு ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு
மாணவி பத்தொன்பது என்ற பதிலுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதனை என்னவென்று வரிசைபடுத்த
வேறு செய்தார். காலக்கொடுமை!!!! தமிழ் வளர்க்கிறோம், தமிழ் வளர்க்கிறோம், என்று
அறைகூவும் பெரியவர்கள் அதனை பார்த்திருக்க வேண்டும்.
யார் மீது தவறென்று தெரியவில்லை. மாணவி மேலா, அவரின் ஆசிரியர் மேலா,
நமது அரத பழசான கல்விமுறையா அல்லது அதனை நூறாண்டுகளாக மாற்றாமல் இருக்கும் நமது
அரசுகளா??
எட்டாம், ஒன்பதாம் வகுப்புகளில் முதலிடங்களில் வராமல் போனதற்கு
வீட்டில் சொன்ன பொய்களும் நினைவிற்கு வர தவறவில்லை.
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, பன்னிரெண்டாம் வகுப்பு
ஆங்கிலத்திற்கு என் ஆங்கில ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கரும்பலகையில்
எழுதி போட்டு நாங்கள் மானப்பாடம் செய்த கட்டுரைகளை!!!! அத்துடன் பல்வேறு நோட்சுகள்
வேறு!!
மாறாக அவர் சரியானபடி கட்டுரை எழுத சொல்லி தந்து எங்கள் திறமையை
வளர்த்திருக்கலாம். அவரை சொல்லி தவறில்லை. மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற
வேண்டும் என்ற பள்ளி கொள்கையில் இருந்து அவர் மாற முடியவில்லை. காரணம் நூற்றுக்கு
நூறு தேர்ச்சி சதவிகிதம் காட்ட வேண்டுமே!! இல்லை என்றால் பள்ளிக்கு அவப்பெயர்
ஏற்பட்டுவிடும் அல்லவா??
அவர் அவ்வளவு திறமை வாய்ந்தவர். ஆயினும் அவரை பின்பற்றி ஆங்கில
இலக்கியம் எடுக்கவோ யாரும் முயற்சிக்கவில்லை. மருத்துவம் அல்லது பொறியியல் தவிர
வேறு எதுவும் உயர்கல்வியே இல்லை என்பது போன்ற மாயை எங்களிடையே உருவாகியிருந்தது..
நானும் இந்த போட்டியில் கடிவாளம் போட்ட குதிரையை ஓடி விட்டேன். அதாகி
பத்து வருடமும் கடந்து விட்டது. தற்போது பள்ளி காலத்தினை அசை போடும்போது எவ்வளவோ
கனவுகளை எனக்குள்ளே புதைத்து விட்டது தெரிகிறது. இப்படி எத்தனை பேரோ!!
நம் நாட்டில் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையும், ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கையும்
மக்கள் தொகைக்கு ஒப்பிடுகையில் வெகு குறைவே.
முக்கியமாக இவ்வளவு பொறியியல் கல்லூரிகள் இருக்குமிடத்தில் எத்தனையோ
புதிய கண்டுபிடிப்புகளும், “பேடன்ட்”டுகளும் வந்திருக்க வேண்டும்.. ஆனால் உண்மை
நிலை வேறு.
தற்போதெல்லாம் பொறுமையாகவோ, மற்றவர்களை அனுசரித்தோ போகும் மக்களை
பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது.
”இன்டிகேட்டோர்” போடாமல்
வண்டியை திருப்பி விட்டு, பின்னால் வருபவன் லேசாக உரசினாலே , அவன் பரம்பரையே
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அர்ச்சிக்கும் வாகன ஓட்டிகள், தார் சாலை மொத்ததையும்
தானே குத்தகைக்கு எடுத்ததை போல செல்லும் பாதசாரிகள், பேருந்தில் சில்லறை இல்லாதவர்களை கற்பழிப்பு
குற்றவாளி போல பார்க்கும் நடத்துனர்கள், வரிசையா?? அப்படினா என்ன என்று கேட்கும்
மேத்த படித்த மேதாவிகள், ஏதோ வங்கியை கொள்ளை அடிக்கத்தான் வந்திருப்பதை போல
பார்க்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், இவர்கள் எல்லாம் தினசரி நம் பொறுமையை
சோதிக்கும் மக்களில் சிலர்!!!!
மேலே சொன்ன உதாரணங்களோடு வெகு சிலவே.. இது போன்று தினந்தோறும் நம்
ஒவ்வொருவருக்கும் நடக்கும் நிகழ்வுகள் எண்ணில் அடங்கா.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு படிப்பதற்காக வந்த போது
கூட மக்கள் ஓரளவிற்கு அனுசரணையாக தான் தெரிந்தார்கள்.. யாரிடமும் ஒரு அவசரமோ,
பொறுமையின்மையோ அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் தற்போது நிறைய மாற்றங்கள்.
இதெல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலையோ என்று
அச்சமாக இருக்கிறது. இந்த
மாற்றங்களுக்கெல்லாம் நானும் விதிவிலக்கல்ல!! கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை முறை
என் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்திருக்கிறேன் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இதெற்கெல்லாம் முக்கியமான
காரணமாக, எல்லோரையும் ஆட்கொண்டுள்ள போட்டி மனப்பான்மையை சொல்லலாம். போட்டி
மனப்பான்மையால் பல நல்ல நட்புகள் பாழாய் போகின்றன அல்லது உருவாவதே
இல்லை!!! நம் பள்ளிக்காலத்திலோ, கல்லூரி
காலத்திலோ , கூட படித்த எல்லோரையும் நினைவிருக்குமா நமக்கு??
அதே நண்பன் திரைப்படத்தில் “ நிலவில்
இரண்டாவதாக கால் வைத்தவர் யார் என்று தெரியுமா?” என்று ஒரு கேள்வி வரும். ஆம் இது
தான் நமது கல்விமுறை. முதலாய் வருபவனை தவிர வேறு யாருக்கும் மதிப்பு
கொடுப்பதில்லை. சிறு வயதிலிருந்தே இப்படி வளர்ப்பதால் நமக்கும் போட்டி மனப்பான்மையும்
வளர தொடங்கிவிடுகின்றதோடு, மற்றவர்களை அனுசரிக்கும் பண்பும், மதிப்பதையும் மறந்து
விடுகிறோம் அல்லது கற்றுகொள்வதே இல்லை.
இதற்கு பெற்றோர்களுக்கும் பெரும்பாலான பங்கு உண்டு. அநேக பெற்றோர்கள்
குதிரை ஜாக்கி போல தான் பிள்ளைகளை ஓட்டுகிறார்கள். பெற்றோர்கள் என்ன
சொல்லுகிறார்களோ/ சொல்லிதருகிறார்களோ அதனை தான் குழந்தைகள் பின்பற்றப் போகின்றன.
எல்லோருக்கும் அறிவுரை கூறும் அளவிற்கு எனக்கு அனுபவமும் இல்லை,
வயதும் இல்லை.
இருந்தாலும் என் மனதிற்குத் தோன்றிய சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.
இருந்தாலும் என் மனதிற்குத் தோன்றிய சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.
குழந்தைகளுக்கு முதலில் ஓரளவிற்காவது முடிவெடுக்கும் சுதந்திரமளியுங்கள்!!!
அத்துடன் முதலாய் வா, முதலாய் வா என்று விரட்டாதீர்கள்!! அவர்களை சுற்றி நடக்கும்
சிறு சிறு நிகழ்வுகளையும் அனுபவிக்க செய்யுங்கள். அனைத்து குழந்தைகளுக்கும் புதிய விஷயங்களை கற்று
கொள்வதிலும், புது அனுபவங்களை பெறவும்
அளவிலடங்கா ஆவல் இருக்கும். அதனை சரியாக கண்டுபிடித்து நிறைவேற்றுங்கள். இருக்கும்
எல்லா “கிளாசுகளிலும்” கொண்டு சேர்க்காமல் குழந்தை விருப்பம் அறிந்து
சேர்த்து விடுங்கள். இரண்டாம், மூன்றாம் வகுப்புகளின் போதே “டியுசன்” சேர்க்காமல்
நீங்களே குழந்தைகளிடம் அமர்ந்து பாடம் சொல்லிதர முயலுங்கள். நிறைய புத்தகங்களை
வாசிக்க சொல்லி தாருங்கள். புத்தகங்கள் குழந்தைகளின் கற்பனை சக்தியை மிகவும் அதிகப்படுத்தும்.
மிக முக்கியமாக குழந்தைக்கு, முதலாய் வந்தால் அதை வாங்கித் தருகிறேன் இதை வாங்கித்
தருகிறேன் என்று வாக்களிக்காதீர்கள். அவ்வாறு செய்வது லஞ்சம் தருவதை போலத்தான்.
அத்துடன் அப்படி செய்வது தேவையில்லாத ஒரு போட்டி மனப்பான்மையையும்,
கிடைக்காவிட்டால், மிகப்பெரும் ஏமாற்றத்தையே குழந்தைக்கு தரும்!!! நம் பாரதத்தின்
வருங்கால தூண்கள் நமது குழந்தைகளே. அவர்கள் சரியானபடி வளர்வதும் அமைவதும் உங்கள் கைகளிலே தான்!!! உணருங்கள் பெற்றோர்களே!!!
So true sir... hoping to read more of your writings..
ReplyDeleteஉண்மை தான் . ஆதங்க பட ஆரம்பித்தால் முடிவில்லாமல் போக கூடிய சஞ்சலங்களில் இதுவும் ஒன்று.ஆனால் நம்பிக்கை இல்லாமலும் இல்லை. கேயாஸ் தியரி தான் - உன்னை சந்திக்கும் மனிதர்கள் மாறுவார்கள் . உன் பதிவு வாசிப்பதில் ரொம்ப சந்தோஷம் :) தொடர்ந்து எழுது !
ReplyDeleteஇனிய நன்பா இன்பா. எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும். என் தமிழ் கொங்சம் திக்கு முக்கு தான். அருமையான தொகுப்பு. பெற்றோர்கள் தான் இன்றய இளய சமுதாயம் மாரிவிட்டதர்க்கு காரனம். போட்டி, பொறாமை அவசரம், வயிற்று எருச்சல் போன்ற குணங்கள் அவர்களால் தான் பிள்ளைகள் கற்றுகொள்கிறார்கள். இந்தத்தொகுப்பின் மூலம் நான் புறிந்துக் கொண்டது இது தான். எந்த நிலையிலும் நான் என் பிள்ளைகளை வ்ருபுருத்த மாட்டேன். அவர்களுகுக்கு நான் என் தாய் தந்தைய் போல் நல்லதை சிருவயதிலேயே புகழ்த்திவிட்டு விடுவேன். அறிவும் சுதந்திரமும் அவர்களை கட்டாயம் உன்னதமாக மாற்றும் என்று நம்புகிறேன். உமது எழுத்து முயற்சீக்கு யமது பாராட்டும் வாழ்த்தும். நன்றி!
ReplyDelete